--- --:--:-- --

ராணுவ வீரரின் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்!

01

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்துக்கு முதலமைச்சர் விஜய் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி பாராட்டினார். தேனி மாவட்டம், காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், காஷ்மீர் ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி குல்காம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கரவாதிகள் சுட்டதில் பலத்த காயமடைந்தார்.

 

 

வலது தோள்பட்டை மற்றும் வாய் பகுதியில் குண்டு ஊடுருவிய நிலையிலும் இவர் தொடர்ந்து சண்டையிட்டு 5 பயங்ரவாதிகளையும் சுட்டுக் கொன்றார். அவரது அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ரா விருதினை இந்தியக் குடியரசுத் தலைவர் கடந்த 8.6.2026 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கி கவுரவித்தார்.

 

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை
மீனாட்சி சுந்தரம் தனது குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மீனாட்சி சுந்தரத்தின் வீர தீர செயலை பாராட்டி அவருக்கு முதலமைச்சர் விஜய் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

 

இந்த நிகழ்ச்சியில், மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் த. சரத்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பொதுத்துறை சிறப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர் எ. சுந்தரவல்லி, முன்னாள் படைவீரர் நலத்துறை இணை இயக்குநர் மேஜர் எம். சுரேஷ், இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.இந்த சந்திப்பின்போது ராணுவ வீரரின் குழந்தையை முதலமைச்சர் விஜய் தூக்கி தனது மடியில் வைத்து கொஞ்சினார்.

Leave a Reply

Right Menu Icon