உணவகத்திற்குள் இளைஞர் வெட்டிக்கொலை ! 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உணவகத்திற்குள் இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெருமாள்பட்டி எனும் இடத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியது. உயிரை காப்பாற்றிக்கொள்ள அருகிலிருந்த உணவகத்திற்குள் ஓடினார் மகேஷ். அவரை பின் தொடர்ந்து சென்ற நான்கு பேரும் பட்டப்பகலில் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த பொதுமக்கள் முன்னிலையில் மகேஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
கைப்பந்து போட்டியில் விளையாட அனுமதிக்கவில்லை என்பதற்காக மகேஷ் கொலை செய்யப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. ஓராண்டுக்கு முன்பு பெருமாள்பட்டியில் கைப்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது விமல் என்பவர் விளையாடுவதற்கு மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மகேஷ் தரப்புக்கும் விமல் மற்றும் அவரது கூட்டாளியான சென்னையை சேர்ந்த லாலு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
விமல் மற்றும் லாலு மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இரு தரப்புக்கு இடையேயான மோதலில் மகேஷின் நண்பர் விக்கி கொலை செய்யப்பட்டார். இதன்காரணமாக விமலை கொள்ள மகேஷ் தரப்பினர் முயற்சித்தனர்.
ஆனால் முந்திக்கொண்ட விமல் தரப்பு மகேஷை கொலை செய்தது. இதுதொடர்பாக விமல்ராஜ், அஜித்குமார், ராஜ்குமார், கோபிராஜ் ஆகிய 4 பேர் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் சரணடைந்தனர், கழிவறையில் வழுக்கி விழுந்ததால் 4 பேருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதற்கிடையே கொலைக்கு உடந்தையாக இருந்த கார் ஓட்டுநர் சதீஷ் கைது செய்யப்பட்டார். பிடிபட்டவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் விமல்ராஜ், அஜித்குமார், ராஜ்குமார், மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




