கூடங்குளம் அணுஉலையில் வாலாட்டியது வடகொரியா தான் – தென் கொரியா ‘திடுக்’
கூடங்குளம் அணுஉலையின் கம்ப்யூட்டரை ஹேக் செய்து, தகவல்களை திருடியது வட கொரியா தான் என்று, அதன் அண்டை நாடான தென் கொரியா ஆதாரத்துடன் வெளியிட்டுள்ள தகவல், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கம்ப்யூட்டர் மற்றும் இணையதளம், கடந்த மாதம் ஹேக் செய்யப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலையம் தரப்பு, முதலில் இதை மறுத்தது; அணுமின்நிலைய கட்டுப்பாட்டு அமைப்பில் எந்த சைபர் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியமில்லை என்று சப்பைக்கட்டு கட்டினார்கள்.
ஆனால் அடுத்த நாளே, கூடங்குளம் அணுமின் நிலைய கம்ப்யூட்டரில், ஹேக்கிங் செய்யப்பட்டு தாக்குதல் நடைபெற்றது உண்மைதான் என்று, இந்திய அணுமின் கழகம் விளக்கம் தந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கம்ப்யூட்டரை ஹேக்கிங் செய்து, தகவல்களை வட கொரியா திருடியதாகக்கூறி, தென் கொரிய அடுத்த குண்டை போட்டுள்ளது. அத்துடன், அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளது.
ஹேக்கரின் ஐபி முகவரி, வடகொரியா தலைநகர் பியாங்யாங்கை காட்டுகிறது. இந்த தகவல் திருட்டுக்கு பின்னால், தோரியம் குறித்த அணு மின் தகவல்கள் உள்ளதாகவும், அது விளக்கம் தந்துள்ளது. தோரியம் உற்பத்தி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி வகிப்பது குறிப்பிடத்தக்கது.
பலத்த பாதுகாப்பு நிரம்பிய, சைபர் தாக்குதலை சமாளிக்கும் திறன் உள்ள இந்தியாவிடம், வடகொரியா வாலாட்டியிருப்பதும், அணு உலை பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டிருப்பது, பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




