--- --:--:-- --

முதலமைச்சர் விஜயுடன் பேசியது என்ன? – அன்புமணி விளக்கம்

3

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் விஜயிடம் வலியுறுத்தியதாகவும், அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாகவும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
பாமக தலைவர் அன்புமணி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை இன்று சந்தித்து பேசினார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, “இன்று தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.

 

 

அதற்கான அறிவிப்பை வரும் சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் உரையில் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தோம். மாநில அரசு கணக்கெடுத்தால்தான் துல்லியமாக இருக்கும். 25 நிமிடம் முதலமைச்சருடன் நடந்த சந்திப்பில் முதலமைச்சர், எங்கள் கருத்துக்களை கேட்டுக்கொண்டார்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்றார்.

 

 

தொடர்ந்து அவர் பேசும்போது, எங்கள் அனைத்து கட்சி கூட்டத்தில் தவெக பிரதிநிதி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். அதேபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுகவின் மன மாற்றத்தை வரவேற்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

“தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நான்கரை கோடி. இந்த கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் ஆகும் செலவு 700 கோடிதான்” என்றும் அன்புமணி தெரிவித்தார். மேலும் மேகதாது பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அன்புமணி தெரிவித்தார். முன்னதாக முதலமைச்சர் விஜய்யிடம், அன்புமணி ராமதாஸ் அளித்த மனுவின் விவரத்தையும் வெளியிட்டார்.

 

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் சமூகநீதியைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டு மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த மனுவை தங்களிடம் வழங்குகிறேன். தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் சிக்கல்களில் மிகவும் முதன்மையானது தற்போது நடைமுறையில் உள்ள சமூகநீதியை பாதுகாப்பதும், அனைவருக்கும் முழுமையான சமூகநீதியை வழங்குவதும் ஆகும்.

 

 

தமிழ்நாட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்று அதன் சமூகநீதிக் கொள்கை ஆகும். இந்தியாவில் 100% இட ஒதுக்கீட்டை 100 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த மாநிலம் என்ற சிறப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு. இப்போதும் 50% உச்சவரம்பு என்பதைக் கடந்து 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவது மட்டுமின்றி, அதற்கான சட்டத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்த ஒரே மாநிலம் என்ற பெருமையும் தமிழ்நாட்டுக்கு தான் உண்டு. ஆனால், தமிழ்நாட்டின் சிறப்புக்கு காரணமான 69% இட ஒதுக்கீட்டிற்கே இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

 

 

69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் 13.07.2010ஆம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘‘69% இட ஒதுக்கீடு செல்லும். அதேநேரத்தில் ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் 2012-ஆம் ஆண்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த மே 27ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, வழக்கைத் தொடர்ந்த சில மாணவர்கள் படிப்பை முடித்து விட்டதைக் காரணம் காட்டி இணை வழக்குகளை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தாலும் கூட, இரு முதன்மை வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

 

 

அந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படலாம். அப்போது, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீடுப் பிரிவினரின் மக்கள்தொகை 69%க்கும் கூடுதலாக இருப்பதை நிரூபிக்காவிட்டால், 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது. எனவே, 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காக தமிழகத்தில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

 

இரண்டாவதாக தமிழ்நாட்டில் சுமார் 100 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும் போதிலும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அதன் பயன்கள் சென்றடையவில்லை. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 26.50%, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு 3.50%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20%, பட்டியல் இனத்தவருக்கு 15%, பட்டியலின அருந்ததியருக்கு 3%, பழங்குடியினருக்கு 1% வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 141 சமூகங்களும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் பிரிவில் 7 சமூகங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் 115 சமூகங்களும், அருந்ததியர்களையும் உள்ளடக்கிய பட்டியலினத்தில் 76 சமூகங்களும், பழங்குடியினத்தில் 36 சமூகங்களும் உள்ளன.

Leave a Reply

Right Menu Icon