திடீரென்று விட்டுச் சென்றதால் திமுகவிற்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும் – செல்வப்பெருந்தகை
கூட்டணியில் இருந்து திடீரென்று விட்டுச் சென்றதால் திமுகவிற்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் அந்தக் கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைத்தது மட்டுமல்லாமல் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது. இதனால், திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ’இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் வரும் 8 ஆம் தேதி நடைபெறும் ’இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்குப் பின்னர் திமுகவுக்கு காங்கிரஸ் இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் திமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், காங்கிரஸ் பங்கேற்கும் ’இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது எனவும் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்னைகளில் திமுக என்றைக்கும் குரல் கொடுக்கும் எனவும் திமுக தலைமை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் காயிதே மில்லத் 131 வது பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்த வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வருகை தந்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்திய பிறகே மரியாதை செலுத்துமாறு திமுகவினர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடம் வாக்குவாதம் செய்தனர். துரோகி, பச்சோந்தி, திமுகவிடம் இனி வராதீர்கள் என திமுகவினர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காயிதே மில்லத் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்த வந்தோம். எங்களுக்கு முன்னதாக திமுக தலைவருக்கு நேரம் கொடுத்துள்ளனர். அது தெரியாமல் முன்னதாக எங்கள் கட்சி தொண்டர்கள் வந்து விட்டார்கள். அதனால் ஒரு குழப்பம் ஏற்பட்டுவிட்டது என தெரிவித்தார்.





