பயங்கரவாதம் குறித்து SCO மாநாட்டில் இந்தியா கடும் எச்சரிக்கை..!
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை என்று இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். பயங்கரவாதத்தை கையாள்வதில் “இரட்டை நிலைப்பாடு” (Double Standards) இருக்கக்கூடாது என்று அவர் எச்சரித்தார்.
பயங்கரவாதத்திற்கு நாடு, மதம் கிடையாது என்றும், எந்தவொரு குறையையும் பயங்கரவாதச் செயல்களுக்குக் காரணமாகக் கூற முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். குறிப்பாக, கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் தாக்குதல் மனிதநேயத்தையே உலுக்கிய ஒரு நிகழ்வு என்று அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து ராஜ்நாத் சிங் பேசியதாவது- பயங்கரவாதத்தின் மையப்புள்ளிகள் இனி தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையே சாட்சி. பயங்கரவாதிகள் எங்கு ஒளிந்திருந்தாலும் இந்தியாவால் அவர்களைக் கண்டறிந்து தண்டிக்க முடியும் என்பதை இந்த ஆபரேஷன் நிரூபித்துள்ளது.
அரசு ஆதரவுடன் செயல்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உலகம் புறக்கணிக்கக் கூடாது. இது ஒரு நாட்டின் இறையாண்மையையே தாக்குகிறது. “கண்ணுக்குக் கண் என்பது உலகத்தையே குருடாக்கிவிடும்” என்று மகாத்மா காந்தி தெரிவித்துள்ளார். மோதல்களுக்கு தீர்வுகாண சண்டையிடுவதை விட பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரமே சிறந்தது.
தற்போதைய உலகம் பிளவுபட்டுள்ள நிலையில், மோதல்களைத் தவிர்த்து அனைத்து குடிமக்களும் கண்ணியத்துடன் நடத்தப்படும் ஒரு முறையான உலக ஒழுங்கு அவசியம்.
உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் SCO அமைப்பிற்கு, பிராந்திய அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்யும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. என்று தெரிவித்தார்.





