விமரிசையாக நடந்து முடிந்தது மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.!
மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்று முடிந்தது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய வைபவமான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு ஆடி வீதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.
காலை 6 மணி முதலே திருக்கல்யாணத்தை காண வடக்கு ஆடி வீதி, சித்திரை வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருக்கல்யாணத்தை இலவசமாக காண பக்தர்கள் தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். கோயில் நிர்வாகம் வழங்கிய ரூ.500 , ரூ.200 பாஸ் வைத்திருந்தவர்கள், அதிகாரிகள், முக்கிய நபர்கள் அனைவரும் மேற்கு கோபுர வாயில் வழியாக வடக்கு ஆடி வீதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
காலை 8 மணி அளவில் முருகன், சுந்தரேசுவரர்-பிரியாவிடை, மீனாட்சி அம்மன், பெருமாள் ஆகியோர் தனித்தனியே திருக்கல்யாண மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். 8.15 மணிக்கு விநாயகர் பூஜையுடன் திருமண சடங்குகள் ஆரம்பமாயின.
வேதமந்திரங்கள் முழங்க காப்புக் கட்டுதல், தாரை வார்த்தல், ஆடைகள் மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் மேடையில் நடந்தன. அதைத் தொடர்ந்து 8.55 மணிக்கு சொக்கநாதரிடம் ஆசி பெற்ற மங்கள நாண் (தாலி) மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்கப் பட்டது. அப்போது பக்தர்கள் குறிப்பாக பெண்கள் தாலியை கண்களில் தொட்டு தாலி பாக்கியம் நிலைக்க வேண்டினர். ஏராளமான பெண்கள் புதிய தாலி அணிந்து கொண்டனர்.
திருக்கல்யாணத்தில் மதுரை மீனாட்சி மாணிக்க மூக்குத்தி, வைர கிரீடம் அணிந்து பச்சை நிற பட்டுடுத்தி வெக்கத்தில் சொக்கி நின்றிருந்தார். அதைத் தொடர்ந்து சுந்தரேசுவரர்-பிரியாவிடை, மீனாட்சி அம்மன் பழைய திருக்கல்யாண மண்டபத்துக்கு புறப்பட்டனர். திருமண வைபவத்தை ஆயிரக்கணக்கானோர் நேரடியாக கண்டு தரிசித்தனர். கோயிலுக்கு வெளியே பெரிய எல்இடி டிவி மூலமும் திருக்கல்யாணத்தை பார்த்தனர். பச்சை பட்டு: பச்சை பட்டு உடுத்தினால் பசுமை விளையும் என்பது ஐதீகம். இதனால் இந்த வருடம் உலக மக்கள் பசுமையால் நிறைந்திருப்பார்கள் என்பதை உணர்த்தவே மீனாட்சி அம்மன் பச்சை பட்டுடுத்தி அருள்பாலித்தார்.





