--- --:--:-- --
1

தவெக தலைவர் விஜய், இன்று திருப்பூர் மாவட்டம், அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக தனி விமானம் மூலம், கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு தவெகவினர் மற்றும் அவரது ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து அவிநாசி சாலையில் ரோடு ஷோ நடத்தினார். குறிப்பாக கோவை அவிநாசி சாலையில் சிட்ரா பகுதியில் இருந்து கே.எம்.சி. மருத்துவமனை வரை சுமார் ஒரு கி.மீ. தூரம் வரை அவரது ரசிகர்கள் கூடி நின்று அவரை வரவேற்றனர்.

 

இதனால், கோவை விமான நிலையம் மற்றும் கே.எம்.சி. மருத்துவமனைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாயினர். இதேபோல், கோவை கணியூர் சுங்கச்சாவடி முன்பாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். மேலும், சுங்கச்சாவடி மீதும் ஏறி நின்றும் வருகின்றனர். இதனால் அந்தச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை கணியூரில் விஜய்யை காணவந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் மனவேதனைக்குள்ளான அந்தப் பெண் சம்பவ இடத்தில் கதறி அழுதார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையிடம் இது குறித்து தெரிவிக்கவே, அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினர்.

 

இதேபோல், விஜய்யை வரவேற்க காத்திருந்த தவெக சூலூர் வேட்பாளர் சுகுமாரன், கூட்டத்தில் சிக்கி மயக்கம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். இதுமட்டுமின்றி விஜய்யை காண பெருமாநல்லூர் சந்திப்பில் காலை முதல் காத்திருந்த சுமார் 8 பெண்கள் உட்பட 10 பேர் மயக்கம் அடைந்துள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon