தமிழ்நாட்டின் புதிய உள்துறைச் செயலாளராக மணிவாசன் நியமனம்!
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரை தொடர்ந்து உள்துறைச் செயலாளரும் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாள் முதல் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்காக, மாநிலத்தில் இருக்கும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது உள்ளிட்ட உத்தரவுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை டிஜிபி ஆகியோரை மாற்றம் செய்து அண்மையில் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சாய்குமாரும், இதேபோல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மற்றொரு அதிரடியாக தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரை தொடர்ந்து உள்துறைச் செயலாளரும் மாற்றப்பட்டுள்ளார். உள்துறை செயலாளராக இருந்த தீரஜ்குமார் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சுற்றுலா மற்றும் அறநிலையத்துறைச் செயலராக இருந்த மணிவாசனை புதிய உள்துறை செயலாளராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவரை இன்று மாலை 5 மணிக்குள் பதவியேற்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே, தீரஜ்குமாருக்கு எந்த தேர்தல் பணிகளும் வழங்கப்படக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.






