விரைவில் கே.என். நேரு சிறைக்கு செல்வார்: அமமுக வேட்பாளர் ராஜசேகரன்
திருச்சி மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன், திமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.என். நேரு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: “கடந்த 10 ஆண்டுகளாகத் திருச்சி மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் உள்ள கே.என். நேரு, இந்தத் தொகுதிக்கு எந்தவொரு உருப்படியான வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
தொகுதியின் பல பகுதிகளில் இன்றும் முறையான குடிநீர் வசதி இல்லை; சாலைக் கட்டமைப்புகள் மிகவும் மோசமாக உள்ளன. நேரு நினைத்திருந்தால் இந்தத் தொகுதியை ஒரு முன்மாதிரித் தொகுதியாக மாற்றியிருக்க முடியும், ஆனால் அவர் அதில் தோல்வி அடைந்துவிட்டார்.
மேலும், நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெறும் பணி நியமனங்களில் அவர் ஊழலில் ஈடுபட்டுள்ளார். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்த ஊழல் புகார்கள் தொடர்பாக விரைவில் அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்,” என்று ராஜசேகரன் தெரிவித்தார்.





