தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை – வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், சத்தீஸ்கர் முதல் மன்னார் வளைகுடா வரை தெலங்காணா, ராயலசீமா, உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக, தென் தமிழகம், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், வரும் 10, 11 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 12ம் தேதி லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 12ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.






