--- --:--:-- --

தூத்துக்குடி – சென்னை இடையே இரவு நேர விமான சேவை..!

10

தூத்துக்குடி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி மற்றும் சென்னை இடையே புதிய இரவு நேர விமான சேவை இன்று (மார்ச் 29) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுகிறது. சமீபத்தில் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பணிகளின் மூலம் பெரிய ரக விமானங்கள் எளிதாகத் தரையிறங்குவதற்கான ஓடுபாதை வசதிகளும், இரவு நேரங்களில் பாதுகாப்பாக விமானங்கள் வந்து செல்வதற்கான நவீன ஒளி அமைப்புகளும் (Night Landing Facilities) முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

இதன் தொடர்ச்சியாகவே, தனியார் விமான நிறுவனம் இந்த இரவு நேர சேவையைத் தொடங்கியுள்ளது. இரவு நேர விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இன்று முதல் தூத்துக்குடியிலிருந்து புறப்படும் மற்ற விமானங்களின் நேரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

புதிய அறிவிப்பின்படி:

காலை 8:00 மணிக்குச் சென்னை புறப்பட வேண்டிய விமானம் காலை 8:10 மணிக்கும்,

காலை 11:25 மணிக்குச் செல்ல வேண்டிய விமானம் மதியம் 12:05 மணிக்கும்,

மதியம் 12:15 மணிக்கு பெங்களூரு செல்ல வேண்டிய விமானம் மதியம் 1:10 மணிக்கும்,

மாலை 4:15 மணிக்குச் சென்னை செல்ல வேண்டிய விமானம் மாலை 4:10 மணிக்கும் புறப்படும்.

 

 

முன்பு மதியம் 1:50 மணிக்குச் சென்னைக்குச் சென்று கொண்டிருந்த விமானமே தற்போது இரவு நேர சேவையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த விமானம் தினமும் சென்னையிலிருந்து மாலை 6:15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 7:55 மணிக்குத் தூத்துக்குடி வந்தடையும். மீண்டும் தூத்துக்குடியிலிருந்து இரவு 8:15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9:45 மணிக்குச் சென்னையைச் சென்றடையும்.

 

இந்த புதிய வசதியால் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் அவசரத் தேவைக்காகப் பயணிப்பவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல் நாளான இன்றே ஏராளமான பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்த ஆர்வத்துடன் முன்பதிவு செய்துள்ளனர். இந்த விமான சேவை தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் துறைக்கும் பெரும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon