காங்கிரஸ் குறித்து போஸ் வெங்கட் சர்ச்சை பேச்சு..!
தி.மு.க. கட்சியில் தான் போட்டியிட கேட்ட அதே தொகுதியை காங்கிரஸ் கட்சியும் கேட்பதால், அந்த தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் சொன்னால் நாய் கூட நின்று ஜெயிக்கும் என்று நடிகர் போஸ் வெங்கட் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் அரசியல் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், தி.மு.க. ஏறக்குறைய தனது கூட்டணி கட்சிகளிடம் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளது. அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியிலும் தொகுதிப்பங்கீகு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
வழக்கத்திற்கு மாறாக அ.தி.மு.க., தி.மு.க.. நாம் தமிழர், த.வெ.க, ராமதாஸ் பா.ம.க. – சசிகலா கூட்டணி என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளதால் இந்த தேர்தல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 25-க்கு மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ள தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 28, கம்யூனிஸ்ட் 2 கட்சிகளுக்கு தலா 5 தொகுதி, வி.சி.க 8 என பெரும்பாலும் தி.மு.க. தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்துள்ளது. அடுத்து அந்தந்த கட்சிகள் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை முடிவு செய்ய உள்ளனர்.
இதனிடையே நடிகரும் தி.மு.க ஆதரவாளருமான போஸ் வெங்கட் தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். அதில் அவர் விருகம்பாக்கம் மற்றும் அறந்தாங்கி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற அவர், அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக கூறியுள்ளார். நேர்காணல் முடிந்து வெளியில் செய்தியாளர்களை சந்தித்த போஸ் வெங்கட், பேசிய கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நான் விருகம்பாக்கம், அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு இருந்தேன். அறந்தாங்கி நான் பிறந்த ஊர். அதனால் அறந்தாங்கி தொகுதியில் வாய்ப்பு கோரி நேர்க்காணலில் பங்கேற்றேன். அறந்தாங்கி தொகுதி காங்கிரஸிடம் (காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் எம்எல்ஏவாக) உள்ளது. இந்த தேர்தலில், காங்கிரஸ் வேண்டாம். திமுகவுக்கு கொடுங்கள் என்று கேட்டோம். அதிமுகவில் இருந்தபோது திருநாவுக்கரசர் அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தி.மு.க. சார்பில் உதயம் சண்முகம் ஒரே ஒருமுறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார். அதன்பிறகு திருநாவுக்கரசரசின் குடும்ப வாரிசாக அவரது மகன் தோல்வியடைந்து, 2வது முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 50 ஆண்டுகளில் தி.மு.க.வில் ஒருவருக்கு எம்எல்ஏ ஆக வேண்டும் என்ற கனவு இருந்திருக்கும். அவர் 25 வயதில் உழைக்க தொடங்கி இருப்பார். 75வது வயதில் இறந்து போயிருப்பார். அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கும்.
இந்த தொகுதியில் திருநாவுக்கரசரின் குடும்பம் 6 தேர்தல்களிலும், தி.மு.க ஒரு தேர்தலிலும் போட்டியிட்டுள்ளது. 50 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே திமுக போட்டியிட்டது என்பதை எப்படி ஏற்க முடியும். எப்படி கட்சியை அடுத்த இடத்திற்கு எடுத்து செல்ல முடியும்? என்பதை எடுத்து கூறினேன். அதனை முதல்வர் நோட் செய்துகொண்டு, கூட்டணியை மதிக்க வேண்டும். ரொம்ப பிரஷர் செய்து கேட்டால் தொகுதியை கொடுத்து தானே ஆக வேண்டும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார்.
அனைவரும் உழைத்து கடந்த முறை 30,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தீர்களோ அதைபோல் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு நான் ஸ்டாலின் ஆசைப்பட்டால் நாம் செய்ய வேண்டும். என்ன இப்படி நடந்து கொண்டே இருக்கு என்ற எண்ணம் இருந்தாலும் காங்கிரஸ் மீண்டும் நின்றால் தோற்கடிக்க வேண்டிய எண்ணம் வரவே வராது.
ஸ்டாலின் சொன்னால் அந்த இடத்தில் நாயை நிறுத்தினாலும், நரியை நிறுத்தினாலும் ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற மனநிலை வர வேண்டும் என்று அவர் கூறினார் என போஸ் வெங்கட் கூறியுள்ளார். போஸ் வெங்கட்டின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியை நாய் மற்றும் நரியுடன் ஒப்பிட்டு பேசியதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





