முடிவுக்கு வந்த புதுச்சேரி தொகுதி பங்கீடு?
புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்குப் பிறகு, திமுகவை விட கூடுதலாக இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட முடிவு எட்டப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் வரும் 9 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு இன்றும், திங்கட்கிழமையையும் மட்டுமே அவகாசம் உள்ளது.
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்ததால், இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஒரே தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு, திமுகவை விட கூடுதலாக இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என முடிவு எட்டப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது அதாவது, 30 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் போட்டியிட முடிவானதாக கூறப்படுகிறது.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
அதே சமயம், புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 5 தொகுதிகளில் மட்டும் தனித்து போட்டியிட அக்கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, லாஸ்பேட்டையில் ராஜாங்கம், முத்தியால்பேட்டையில் வழக்கறிஞர் சரவணன், திருபுவனையில் வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி, பாகூரில் இளவரசி, டி.ஆர்.பட்டினத்தில் தமீம் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது.






