இந்திய மாணவர் ‘காரை ஏற்றி கொலை..!
மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜனைச் சேர்ந்த குர்கிரத் சிங் மனோச்சா என்பவர் பிரிட்டிஸ் கொலம்பியாவில் உள்ள நார்தர்ன் லைட்ஸ் கல்லூரியில் முதுகலை டிப்ளமோ படித்து வந்துள்ளார்.
\கடந்த மார்ச் 13-ஆம் தேதி இரவு போர்ட் செயின்ட் ஜான் பகுதியில் உள்ள சார்லி ஏரி படகுத் துறையில் வைத்து 10- 12 பேர் கொண்ட ஒரு கும்பல் குர்கிரத்தை கொடூரமாகத் தாக்கியுள்ளது. தாக்குதலுக்குப் பின், ஒரு வாகனத்தை அவர் மீது ஏற்றிவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குர்கிரத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், குர்கிரத் தனது படிப்பை முடித்துவிட்டு விரைவில் வீட்டிற்கு வரவிருந்தார் என்று அவரது தந்தை குர்பிரீத், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், என் மகன் அப்பாவி. அவன் மிகப்பெரிய கனவுகளுடன் அங்கு சென்றான் என்று அவர் கதறியபடி கூறியுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடகிழக்கு மூலையில் உள்ள போர்ட் செயின்ட் ஜான் என்பது சுமார் 22,000 மக்கள் மட்டுமே வாழும் ஒரு சிறிய நகரம் ஆகும். அங்கு படித்து வந்த குர்கிரத் வாரத்தில் நான்கு நாட்கள் வகுப்புகளுக்கு செல்வராம். மீதமுள்ள மூன்று நாட்கள் அங்குள்ள ஒரு வால்மார்ட் கடையில் வேலை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ராய்ப்பூரில் வசிக்கும் அவரது மூத்த சகோதரர் பிரப்கிரத் சிங் கூறுகையில், வேலை முடிந்ததும் சக மாணவர் குழுவினருடன் குர்கிரத் வெளியே சென்றதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இது வழக்கமான ஒரு சந்திப்புதான் என யாரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. குர்கிரத்தை ஒரு கும்பல் தாக்கியதாகவும் பின்னர் அவர் மீது வாகனம் ஏற்றியதாகவும் எங்களிடம் கூறப்பட்டது. இதில் சுமார் 10-12 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று வேதனையுடன் தெரிவித்தார்.






