தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக?
அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் தவெகவைக் கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் கொடுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவோ, கூட்டணி கட்சித் தலைவர்களோ தவெகவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் குறைந்தது 80 தொகுதிகளை கேட்பதாகவும், இதில் 55 தொகுதிகள் மற்றும் துணை முதலமைச்சர் பதவியும் கொடுக்க என்.டி.ஏ. முன்வந்ததாக சொல்லப்பட்டது.
ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணையப் போவதாக வலம்வந்த யூகங்களுக்கு ரெட் சிக்னல் போட்ட தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், அதிமுக, பாஜகவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் விஜய் தரப்பில் கூட்டணிக்கு தயாராக இல்லை என பாஜக மேலிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பாஜக விஜயுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்புவதாகவும், இருப்பினும் இதற்கு மேல் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என பாஜக மேலிடம் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கூட்டணி இல்லை என்றால், 4 முனைப் போட்டி ஏற்படும் பட்சத்தில், திமுகவின் பெருவாரியான வாக்குகளைத்தான் விஜய் பிரிப்பார் என பாஜக மேலிடம் நினைப்பதாகவும் தலித், கிறித்துவ மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகள் தான் விஜய் வசம் செல்லும் என பாஜக தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் பரப்புரையில் முழுவீச்சில் செயல்பட மாநில பாஜக தலைவர்களுக்கு பாஜக மத்திய தலைமை அறிவுறுத்தியிருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.






