--- --:--:-- --

மத்திய அரசை கண்டித்து தி.மு.க கூட்டணி ஞாயிற்றுக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம்

10

மையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து திருச்சியில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார். இந்த ஆலோசனையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் கே.என்.நேரு, நாடு முழுவதும் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்று கடுமையாகச் சாடினார். குறிப்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், கேஸ் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்ற விவகாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் ஒன்றிய அரசிடம் தான் உள்ளது என்பது கூடத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாகக் குறிப்பிட்டார். நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு, எந்தப் பிரச்சினைக்கு யார் தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படை அதிகாரம் கூடத் தெரியவில்லை என்பது வேதனைக்குரியது என்றும், தேர்தல் நேரத்தில திமுக அரசை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அவர் இத்தகைய கருத்துகளைக் கூறி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான வெற்றிக் கூட்டணி குறித்தும் அமைச்சர் பெருமிதத்துடன் பேசினார். கடந்த சில தேர்தல்களாகத் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் இந்த கூட்டணியை, தோழமைக் கட்சிகளின் மனம் புண்படாத வகையில் அனைவரையும் அரவணைத்து முதலமைச்சர் சிறப்பாக வழிநடத்திச் செல்வதாக அவர் புகழாரம் சூட்டினார். வரவிருக்கும் தேர்தல் தமிழகத்திற்கு மிக முக்கியமானது என்றும், தமிழகத்தில் பாஜக காலூன்றுவதை தடுப்பதே தங்களின் முதன்மை இலக்கு என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தமிழகத்தைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசு மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, நாளை காலை 10 மணியளவில் திருச்சி பி.எஸ்.என்.எல் (BSNL) அலுவலகம் அருகே மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது திருச்சி மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் பேரூர்களில் விரிவாக நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜர், மேயர் அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு போராட்டத்திற்கான தயார் நிலைகள் குறித்து விவாதித்தனர்.

 

Right Menu Icon