தமிழ்நாடு போலீஸ் உளவுப் பிரிவுக்கு புதிய டி.ஜி.பி..!
தமிழக போலீசில் அவ்வப்போது அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்நிலையில், இன்று 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.ஜி.பி-யாக இருந்த பால நாகதேவியை உளவுத்துறை டி.ஜி.பி-யாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேபோல், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி சந்தோஷ் குமாருக்கு பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக கூடுதல் பொறுப்பும், குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறை ஏ.டி.ஜி.பி-யாக ஐ.ஜி., ரூபேஷ்குமாருக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தை சொந்த ஊராகக் கொண்ட பாலநாகதேவி 1995ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். போதைத் தடுப்புத் துறையின் உளவுப் பிரிவிலும், நீலகிரி எஸ்.பி-யாகவும், கோவை மண்டல டி.ஐ.ஜி-யாகவும் இருந்துள்ளார். மதுரை மாவட்ட வரம்பின் முதல் பெண் டி.ஐ.ஜி-யாக கடந்த 2012-ல் அவர் நியமனம் செய்யப்பட்டார். மதுரை டி.ஐ.ஜி-யாக பொறுப்பேற்கும் முன் சென்னையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.ஐ.ஜி-யாக இவர் இருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில், பால நாகதேவி பொருளாதாரக் குற்றப்பிரிவின் ஏ.டி.ஜி.பி-யாக பணியாற்றி அவருக்கு டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டது.






