விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் – மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் தரையிறங்கியபோது நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 5 பேரும் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
மராட்டியத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து வரும் நிலையில், தனது சொந்த ஊரான பாராமதியில் நடக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் மராட்டிய துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் புறப்பட்டுள்ளார்.
பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் சென்ற விமானம் தரையிறங்க முயற்சித்தபோது, தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
விமானம் தரையிறங்கும்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜித் பவார் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.






