--- --:--:-- --

தமிழக மணல் குவாரி விதிகளில் மாற்றம்..!

9

மிழகத்தில் அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் மற்றும் குளங்களில் இருந்து மணல் மற்றும் இதர கனிமங்களை எடுப்பதற்கான விதிமுறைகளில் மாநில அரசு அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதற்காக ‘தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள், 1959-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

கனிமங்களை எடுக்க விண்ணப்பிப்பதற்கான கட்டணம் தற்போது ரூ.1,500-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, விண்ணப்பதாரர் விண்ணப்பக் கட்டணத்துடன் சேர்த்து திரும்பப் பெறத்தக்க ‘பாதுகாப்பு வைப்புத்தொகையை’ செலுத்த வேண்டும்.

 

இது எடுக்க அனுமதி கோரும் கனிமத்தின் அளவிற்கான அரசு உரிமைத் தொகையைப்போல (Seigniorage Fee) 2 மடங்கு இருக்கும். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் கனிமங்களை எடுப்பது அல்லது நிபந்தனைகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணைக்குப் பிறகு அனுமதியை ரத்து செய்யலாம்.

 

விதிமீறல் கண்டறியப்பட்டால், கூடுதலாக எடுக்கப்பட்ட கனிமத்தின் மதிப்பு மற்றும் அதற்கான அரசு உரிமைத் தொகை ஆகியவை சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து வசூலிக்கப்படும். கனிமங்களை எடுப்பதால் குளங்களுக்கு சேதம் ஏற்பட்டால், அதனை சீரமைப்பதற்கான செலவு பாதுகாப்பு வைப்புத்தொகையிலிருந்து கழிக்கப்படும்.

 

ஒருவேளை சேதத்தின் மதிப்பு வைப்புத்தொகையை விட அதிகமாக இருந்தால், அது 1800-ஆம் ஆண்டின் வருவாய் மீட்புச் சட்டத்தின் (Revenue Recovery Act) கீழ் வசூலிக்கப்படும். இதற்கு முன்னால், விதிமீறல்கள் நடந்தால் அனுமதி ரத்து செய்யப்பட்டு, சேதத்தின் மதிப்பிற்கு ஏற்ப இழப்பீடு வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது வைப்புத்தொகை முறை மூலம் இது இன்னும் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

புதிய விதிகளின்படி, அனுமதி காலம் முடிந்தவுடன் அல்லது அனுமதிக்கப்பட்ட அளவு கனிமங்களை எடுத்து முடித்தவுடன், அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்வார்கள். நிபந்தனைகள் அனைத்தும் சரியாகப் பின்பற்றப்பட்டிருப்பதை உறுதி செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமான உத்தரவின் மூலம் பாதுகாப்பு வைப்புத்தொகையை மீண்டும் விண்ணப்பதாரருக்கே திருப்பி வழங்குவார்.

Right Menu Icon