பெண்களுக்கு மாத ஓய்வூதியம்… ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்..
பெண்களுக்கு மாத ஓய்வூதியம் முதல் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வரை பல்வேறு புதிய அறிவிப்புகளை நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு தொடங்கியது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் முதலமைச்சரின் பதில் உரையுடன் பேரவை நிறைவுபெறுகிறது. அதன்படி, ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்ற உள்ளதை புறக்கணிக்கும் விதமாக அதிமுக, பாஜக பேரவை கூடிய நிலையில் அதிமுக, பாஜக உறுப்பினர்கள் இதுவரை வரவில்லை.
இதற்கிடையே ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியால் மாநிலம் சந்தித்த பின்னடைவு, ஓரவஞ்சனையுடன் செயல்படும் ஒன்றிய அரசு என்ற இடியாப்ப சிக்கல் போன்ற சூழலில்தான் 6வது முறையாக ஆட்சிக்கு வந்தோம்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் மறுபக்கம் கவலையும் இருந்தது. பின்னடைவிலிருந்த தமிழகம், ஒத்துழைக்காத ஓரவஞ்சனை மத்திய பாஜக அரசு ஆகியவற்றால் கவலையில் இருந்தேன்.
தற்போது 5 ஆண்டு கால ஆட்சியில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதுதான் இதற்கு காரணம். என்னுடைய இலக்குகளை நான் வென்றுவிட்டேன். தமிழ்நாடு தலை நிமிர்ந்துள்ளது. ஒரு சாதனை செய்தால் அதை மிஞ்சும் அளவுக்கு மற்றொரு சாதனை செய்வதே திராவிட மாடல் ஆட்சி. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும்
முதல் கையெழுத்திட்டது மகளிர் விடியல் பயண திட்டத்திற்குதான்.
‘விடியல் பயணம்’ மூலம் ஒவ்வொரு மகளிரும் ரூ.60,000 வரை சேமித்துள்ளனர். மாதம் ரூ.1,000 வழங்குவதை அண்ணனின் மாதாந்திர சீர் என்கிறார்கள் பெண்கள். ‘மகளிர் உரிமைத்தொகை’ மூலம் ஒவ்வொரு பெண்களுக்கும் தலா ரூ.29,000 கிடைத்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17%-இல் இருந்து 58% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் மூலம் 5 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் 2 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும்.
பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எதிர்கொள்ளாத நெருக்கடிகளை தற்போது எதிர்கொள்கிறோம். அவர்கள் காலத்தில் இருந்த ஆளுநர்கள் இப்படி இல்லை. முரண்பாடுகள் இதயத்தில் இருந்தாலும் அதை ரணமாக்கும் வகையில் செயல்பட்டதில்லை. சோதனைகளை எதிர்கொண்டவனாக நான் நின்றுகொண்டிருக்கிறேன். யாரும் எங்களுக்கு தேசப்பக்தி பாடம் எடுக்க வேண்டாம்.
தேசப்பக்தி பாடம் எடுப்பவர்கள் தேசத்திற்காக போராடியிருக்கவில்லை. தேச ஒருமைப்பாட்டில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. தனது பதவியை ஆளுநர் அவமானப்படுத்தும் வகையில் செயல்படுத்துகிறார்” என்று பேசினார்.






