--- --:--:-- --

வீடு தேடி வரும் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்..!

2

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனையாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்பட வேண்டும் என கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில், “2026 ஆம் ஆண்டு தைத்திருநாளை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட அரசாணை எதிர்நோக்கப்படுகிறது.

 

இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாயவிலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவது தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் மற்றும் டோக்கன்கள் விநியோகம் குறித்தும் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைத் தவறாது பின்பற்றி இத்திட்டத்தினைச் சிறப்பான முறையில் செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

டோக்கன்கள் விநியோகம் குறித்து சுற்றறிக்கையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் துவங்கப்படும் தேதி தனியே பின்னர் அறிவிக்கப்படும். மண்டலங்களில் செயல்படும் நியாய விலைக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஏற்ப 02.01.2026-க்குள் டோக்கன்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நியாயவிலைக்கடைகள் நடத்தும் அனைத்து வகையான நிறுவனங்களுக்கும் (Agencies) பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திடத் தேவைப்படும் டோக்கன்களை கூட்டுறவுத்துறை மூலம் அச்சிட்டு வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அதேபோல குடும்ப அட்டைதாரர்களுக்குச் சுழற்சி முறையில் (STAGGERING SYSTEM) பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் மேற்கொள்ள ஏதுவாக குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டு, தெருவாரியாக பராமரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில், அட்டைதாரர் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனையாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முதல் நாள் முற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பிற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திட ஏதுவாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். இடவசதியைப் பொறுத்து, இரண்டாம் நாள் முதல் தினந்தோறும் முற்பகல் 150 முதல் 200 பேர் வரை மற்றும் பிற்பகல் 150 முதல் 200 பேர் வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திட ஏதுவாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Right Menu Icon