ஆந்திராவை தொடர்ந்து தமிழ்நாட்டை அச்சுறுத்தும் காய்ச்சல்..!
கடந்த சில தினங்களாக ஆந்திராவில் ஸ்க்ரப் டைஃபஸ் எனும் காய்ச்சலால் 1,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சித்தூர் மாவட்டத்தில் 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேரடியாக இதனால் யாரும் இறந்ததாக உறுதியாகவில்லை என்றபோதிலும், இதுவரை 9 பேர் வரை இதனால் இறந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
தமிழகத்திலும் ‘ஸ்க்ரப் டைபஸ்’ தொற்று அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் கடந்த 20 நாட்களில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் ‘ஸ்க்ரப் டைபஸ்’ அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சலானது, ஒருவகை ஒட்டுண்ணிக் கடியால் பரவும் காய்ச்சலாகும். ஓரியன்சியா சுட்சுகாமுஷி எனும் பாக்டீரியா டிக் மைட்ஸ் எனும் உன்னிகள்தான் இந்த தொற்றை ஏற்படுத்துகின்றது.
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக இந்த பாக்டீரியா காணப்பட்டாலும் மேற்கே பாகிஸ்தான், கிழக்கே ஜப்பான், தெற்கே ஆஸ்திரேலியா இந்த மூன்று நாடுகளை மூன்று புள்ளிகளாகக் கொண்டு முக்கோணம் வரைந்தால் அது “சுட்சுகாமுஷி முக்கோணம்” என்றழைக்கப்படுகிறது. இந்த முக்கோணம் இருக்கும் பகுதியில் சுமார் நூறு கோடி மக்கள் இந்த ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து ரேடாரில் வருகிறார்கள்.





