வடிகால் பணிகளை முடிக்காததற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் – தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு
வடிகால் பணிகளை முடிக்காததற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பது குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் துயரத்திற்குக் காரணம் வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே என்று தமிழக அரசை அவர் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்து இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- “சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம்.” என குற்றம்சாட்டியுள்ளார். “பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால், கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது.” என குறிப்பிட்டுள்ள அவர், ” மழையால் பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
“மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்,” என்று கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




