4 மாவட்டங்கள் கனமழை எச்சரிக்கை..!
வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மலாக்கா ஜலசந்தி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவிவருகிறது. மேலும், இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியையொட்டி, தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவிவருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பூவாலை, அலமேலு மங்காபுரம், மணிகொல்லை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவு நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கை தடுக்கும் நோக்கில், பரவனாறு அருவா மூக்கு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பரவனாறு தூர்வாரப்பட்ட நிலையில், தடுப்புச்சுவர் கட்டப்படாததால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரவலாக கொட்டித் தீர்த்த கனமழையால், கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழகண்ணாப்பூர், வடமருதூர், பனையூர் உள்ளிட்ட கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
அதேபோல, கருவேலங்கடை, செட்டிச்சேரி, மேலசெட்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. வேதாரண்யம் அருகே கனமழை காரணமாக உம்பளச்சேரியில் 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன. கள்ளிக்குடி, நெடும்பலம், வேப்பஞ்சேரி, குடவாசல், மருதவணம் உள்ளிட்ட பகுதிகளில் இளம் தாளடி மற்றும் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் சிற்றருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், இந்த அருவிகளில் குளிக்க 4ஆவது நாளாக தடைவிதிக்கப்பட்டதால், நீராட முடியாமல் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், பாம்பன் துறைமுகம் பகுதிகளில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.





