டெல்லி சம்பவத்தில் குற்றவாளிகளை வேட்டையாட அமித்ஷா உத்தரவு..!
டெல்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நவ.10 (திங்கள்கிழமை) இரவு 7 மணியளவில் வெள்ளை நிற ஹூண்டாய் கார், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் விசாரித்துவந்த நிலையில் இந்த வழக்கின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு விசாரணை தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிஆர்பிஎப், மத்திய புலனாய்வு அமைப்புகளும் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை ஆய்வு செய்திருந்தன.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகலில் நடைபெற்றது. டெல்லி காவல்துறை, உளவுத் துறை என அனைத்து பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த உயர்மட்ட பாதுகாப்பு கூட்டம் குறித்து அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; டெல்லி கார்வெடிப்பு குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினேன்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு குற்றவாளியையும் வேட்டையாடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்தச் செயலில் ஈடுபட்ட அனைவரும் எங்கள் விசாரணை அமைப்புகளின் முழு கோபத்தையும் எதிர்கொள்வார்கள். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
இதற்கிடையே ஆப்ரிக்க நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து திரவுபதி முர்முவிடம் அமித்ஷா விளக்கி உள்ளார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.






