--- --:--:-- --

திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு..!

2

மிழ்நாட்டில் S.I.R. பணிகளுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், 2 வாரங்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி திமுக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

 

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (11ஆம் தேதி) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில், மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், “இது முக்கியமான பிரச்னை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பிரச்னை உள்ளது.

 

தமிழ்நாட்டில் தற்போது மழை பெய்யும் காலம். இந்த நேரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது சரியாக இருக்காது. அதிகாரிகள் மழைக் கால பணிகளை கவனிக்க வேண்டி உள்ளது. அடுத்து ஜனவரியில் பொங்கல் அறுவடை காலம் வரும். டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. இந்த நேரங்களில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முழுமையாக பங்கேற்க இயலாது.

 

 

குறிப்பாக ரெவன்யூ அதிகாரிகள் மற்றும் பிற மாநில அதிகாரிகள் பருவமழை வெள்ளம் உள்ளிட்ட பணிகளுக்காக ஈடுபடுத்தப்படுவார்கள். எனவே அந்த சமயத்திலும் இந்த எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை மேற்கொள்வதில் பல பிரச்சனையான சூழல் உள்ளது. இதனால், மக்கள் முழுவதுமாக எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும்.

 

எனவேதான் எஸ்.ஐ.ஆர். நடத்துவதற்கு இது உகந்த காலம் அல்ல என நாங்கள் தொடக்கம் முதலே கூறி வருகிறோம். பல இடங்களில் இணையதள சேவைகள் இல்லை. பின்தங்கிய இடங்களில் பல பிரச்னைகள் உள்ளது. தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடங்கி விட்டது. ஒரு மாதத்தில் முடிக்க உள்ளனர். இது வாக்காளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

லட்சக்கணக்கான விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டி உள்ளது. அதற்குப் போதிய அவகாசம் இல்லை” என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பல்வேறு விவகாரங்கள் இருந்தாலும்; இது அனைத்துக்கும் தேர்தல் ஆணையம் உரிய பதிலை, விளக்கத்தை கொடுக்க வேண்டும். அதை அவர்கள் கொடுப்பார்கள்” எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அனைத்து மனுக்களின் நகல்களையும் தேர்தல் ஆணைய தரப்புக்கு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

மேலும், திமுக, தமிழ்நாடு காங்கிரஸ், சி.பி.எம் கட்சிகள் உள்ளிட்ட 6 புதிய மனுக்கள் மீது இரண்டு வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இது சட்டபூர்வமானதுதானா என்கிற அம்சம் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று கபில் சிபல் வாதிட்டார். அப்போது நீதிபதிகள் கண்டிப்பாக சட்டப் பிரச்னை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர்.

Right Menu Icon