உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று சந்திக்கிறார் விஜய்..!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மாமல்லபுரத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தவெக தலைவர் விஜயை இன்று சந்தித்து ஆறுதல் கூறுகிறார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காணொலிக் காட்சி மூலம் ஆறுதல் கூறிய விஜய், நேரில் வந்து சந்திப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்க காவல் துறை அனுமதி வழங்கவில்லை என தவெக தரப்பில் கூறப்படும் நிலையில், அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விஜயை சந்திக்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் இன்று விஜய் சந்திக்கிறார்.
இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தங்களது கார்களில் காலை முதலே பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை கரூர் அழைத்து வந்தனர். அங்கிருந்து ஐந்து சொகுசுப் பேருந்துகளுக்கு பூஜை போடப்பட்டு, அதில் அனைவரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர் உள்ளிட்டோரும் சென்னை வந்தடைந்தனர்.
கரூர் துயரம் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு அதாவது அக்டோபர் 27ஆம் தேதியான இன்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து வந்து விஜய் ஆறுதல் கூறுவது குறிப்பிடத்தக்கது.





