--- --:--:-- --

எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்..!

9

துரை அவனியாபுரம் வாடிவாசல் அருகே அதிமுக சார்பில் நிறுவப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் கீழே தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் கிராமத்தில், ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் அருகே சுமார் 3 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலை நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் கீழே தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இன்று காலை சிலை தலைகீழாக விழுந்து கிடப்பதை கண்ட அதிமுகவினர், இதுகுறித்து அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அங்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார். இச்சம்பவத்தை கண்டித்து அதிமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, “பொது அமைதியை சீர்குலைக்க முயலும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

 

இதனை அடுத்து, சிலை மீண்டும் புதிதாக நிறுவும் பணிகள் அதிமுகவினரால் மேற்கொள்ளப்பட்டன.

 

Right Menu Icon