நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி குறைப்பு..!
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், “நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலாகின்றன. நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார். விற்பனை மற்றும் சேவை வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரியில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு பரிசு காத்திருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 5, 12, 18, 28 என நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டியை இனி 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன்மூலம், பல்வேறு பொருட்களின் விலை குறைய உள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் கூறினார். நாளை (செப்டம்பர் 22, 2025) முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் அமலுக்கு வர உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 21) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துகள். நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலாகின்றன. நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். ஏழைகள், நடுத்தர மக்கள், வர்த்தகத்தினருக்கு ஜிஎஸ்டி சீர்திருத்தம் பயனளிக்கும். ஜிஎஸ்டி குறைப்பு நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஜிஎஸ்டி 2.0 இந்தியாவின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும். ஜிஎஸ்டி குறைப்பு பல்வேறு வரி விகிதங்களை மாற்றி எளிமையாக்கியது.
ஒரே நாடு, ஒரே வரி என்பது தற்போது முழுமை பெற்றுள்ளது. சாமானிய மக்கள் பயன்படுத்தும் 99% பொருட்கள் தற்போது 5% வரியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. பிரெட், பிஸ்கட் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும், டிவி ஸ்கூட்டர்களின் விலையும் குறையும்.
இதற்கு முன்னதாக இருந்த குழப்பமான வரி விதிப்புகளால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மக்கள் செலுத்தி வந்த பல்வேறு வரிகளை ஜிஎஸ்டி சீர்திருத்தம் மாற்றியுள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், அதிக முதலீடுகளுக்கு வழி வகுக்கும். வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் தற்போது 2வது பரிசு கிடைத்துள்ளது. நாளை முதல் 5 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே அமலில் இருக்கும். ஜிஎஸ்டி, வருமான வரி குறைப்பு மூலம் 2.5 லட்சம் கோடி பணப்புழக்கம் ஏற்படும்.
‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் சுதேசி பிரச்சாரத்தில் அனைத்து மாநில அரசுகளும் இணைய வேண்டும் என்றும், தங்கள் மாநிலங்களில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் முதலீட்டிற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். நாடும் மாநிலங்களும் இணைந்து செயல்படும்போது, ’ஆத்மநிர்பர் பாரத்’ கனவு நிறைவேறும்.
இன்று, தெரிந்தோ தெரியாமலோ, பல வெளிநாட்டுப் பொருட்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன.
நம் நாட்டு இளைஞர்களின் கடின உழைப்பை முதலீடாக செலுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை நாம் வாங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டையும் சுதேசியின் அடையாளமாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு கடையையும் சுதேசியால் அலங்கரிக்க வேண்டும். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய, நாம் தன்னம்பிக்கை பாதையில் நடக்க வேண்டும். மேலும் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் மிகப் பெரிய பொறுப்பு நமது சிறு, குறு நிறுவனங்கள் மீதும் உள்ளது.
GST விகிதங்களைக் குறைப்பதும், விதிகள் மற்றும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதும் நமது MSME-கள், சிறு தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்களுக்கு பெரிதும் பயனளிக்கும். அவற்றின் விற்பனை அதிகரிக்கும், மேலும் அவை குறைந்த வரி செலுத்த வேண்டியிருக்கும். அதாவது அவை இரட்டை நன்மையைப் பெறும். நாட்டின் சுதந்திரம் சுதேசி மந்திரத்தால் வலிமை பெற்றது போல, நாட்டின் செழிப்பும் சுதேசி மந்திரத்தால் மட்டுமே வலிமை பெறும்” எனத் தெரிவித்தார்.






