இன்று இங்கெல்லாம் கனமழை வெளுக்கும் – வானிலை மையம்
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் சற்று குறையக்கூடும். ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி சற்று குறைவாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென்மேற்கு – மத்தியமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் இன்று இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.






