விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி வழக்கு.. அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு..!
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலிக்க உத்தரவிடக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
கடந்த 13 ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை துவங்கிய அவர், செப்டம்பர் 20 ம் தேதி முதல் டிசம்பர் 20 ம் தேதி வரை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கக் கோரி, த.வெ.க. சார்பில் கடந்த 9 மற்றும் 15 ம் தேதிகளில் ல் டிஜிபி-யிடம் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, உயர்நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் அனுமதி வழங்கும்படி, மாநிலம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்கக்கோரி நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு த.வெ.க தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி முறையீடு செய்தார். அப்போது, ஒவ்வொரு முறையும் கடைசி நேரத்தில் தான் காவல்துறை கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், இந்த மனுவை இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.






