பட்டாசு வெடிக்க நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக்கூடாது? – உச்சநீதிமன்றம் கேள்வி
பட்டாசு வெடிக்க நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காற்று மாசு காரணமாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்ற சட்ட ஆலோசகரான மூத்த வழக்கறிஞர் பரமேஷ்வர், டெல்லியில் பட்டாசு வெடிக்க முழு தடை விதிப்பது ஏராளமானவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று கூறினார். இதனைக் கேட்ட நீதிபதிகள், தலைநகரில் உள்ள மக்கள் மட்டும் நல்ல காற்றைப் பெறும் உரிமையைப் பெற்று இருந்தால், மற்ற நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு ஏன் அந்த உரிமை இல்லை என்று வினவினர்.
கடந்த குளிர்காலத்தில், தான் அமிர்தசரஸில் வசித்ததாகக் கூறிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், டெல்லியை விட அங்கு காற்று மாசு மோசமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். பட்டாசுகளை தடை செய்ய வேண்டும் என்றால், நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இது தொடர்பாக, காற்று தர மேலாண்மை ஆணையத்திடம் இருந்து விரிவான அறிக்கையைப் பெற மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.பசுமை பட்டாசுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்த நிலையில், வரும் 22 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




