செங்கோட்டையன் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம்..!
செங்கோட்டையனை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து கிளைச் செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்துள்ளனர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்து இருந்தார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி எப்படி எதிர்வினையாற்றுவார் என பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தேர்தல் சுற்றுப்பயணத்திற்காக திண்டுக்கல்லில் முகாமிட்டு இருந்த ஈபிஎஸ், முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, காமராஜ், விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கி ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். மேலும் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான சுப்பிரமணியன், ஈஸ்வரமூர்த்தி, தேவராஜ், ரமேஷ் உள்ளிட்டோரும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் குவிந்தனர்.
அதேநேரம், தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காக அனைவரும் இணைய வேண்டும் என பேசியதாகவும், கட்சிப் பதவியைப் பறித்ததில் மகிழ்ச்சி என்றும் செங்கோட்டையன் நியூஸ் 18 தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். தொடர்ந்து ஈரோட்டில் பேசிய செங்கோட்டையன், பதவி நீக்கத்திற்கு காலம் பதில் சொல்லும் என்றார். செங்கோட்டையனின் கட்சி பொறுப்பு நீக்கம் சர்வாதிகாரம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்தார்.
அதேபோல், செங்கோட்டையனை கட்சிப் பொறுப்பு நீக்கம் விபரீத முடிவு என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சசிகலா, கட்சிப் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது அறிவார்ந்த செயல் அல்ல என விமர்சித்துள்ளார். தனது அறிக்கையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது என்றும் கட்சி நலனுக்கும் உகந்தது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும் எனவும் சசிகலா தெரிவித்துள்ளார். இந்நிலையில், செங்கோட்டையனை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து கிளைச் செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்துள்ளனர்.
அதன்படி கோபிச்செட்டிபாளையம் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் கழக பொறுப்பாளர்கள் சார்பு செயலாளர்கள் கிளை செயலாளர்கள் ஆகிய 500க்கும் மேற்ப்பட்டோர் ராஜினாமா செய்தனர். மேலும் செங்கோட்டையன் முக்கிய நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கோபிசெட்டிப்பாளைத்தில் அதிமுக முன்னாள் எம்.பி.சத்யபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. பதவியை நான் ராஜினாமா செய்ய தயார்” என பேட்டியளித்துள்ளார்.





