அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கை – செப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு வசதி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள செய்தியில், புதுமைப்பெண். தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்களால் உயர்கல்வியில் மாணாக்கர் சேர்க்கை ஆர்வம் உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு அரசுக் கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் மட்டும் புதியதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், மாணவர்களின் தேவைக்கேற்ப 15,000க்கும் மேற்பட்ட மாணாக்கர் சேர்க்கை இடங்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இணையதளத்தில் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள தவறவிட்ட மாணாக்கர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்குடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.





