--- --:--:-- --

பவானி ஆற்றுப்பாலத்தின் மீது ஏறி இளைஞர் அட்டகாசம்!

7

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்பாலத்தின் கைப்பிடி சுவர் மீது ஏறி நின்று அட்டகாசம் செய்த இளைஞரைப் போலீசார் பிடிக்க முயன்றபோது, ஆற்றில் குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்ல மேட்டுப்பாளையத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இதேபோல் மலைகளின் அரசியான ஊட்டிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுலாவுக்காகவும், பல்வேறு பணி நிமித்தமாகவும் பயணம் செய்து வருகின்றனர்.

 

இதனால், மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலை 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் நேற்று (19.08.2025) மாலை மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் உள்ள பவானி ஆற்றுப்பாலத்தின் கைப்பிடி சுவர் மீது ஆபத்தான முறையில் ஏறி நின்று இளைஞர் ஒருவர் அட்டகாசம் செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட பொது மக்களையும் தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.

 

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர் ஒருவர் அவரை பிடிக்க முற்பட்டபோது ஆற்றில் குதித்து அந்த இளைஞர் தப்பிச்சென்றுள்ளார். திடீரென இளைஞர் ஒருவர் ஆற்றுப்பாலத்தின் கைப்பிடிச்சுவர் மீது ஏறி நின்று அட்ராசிட்டி செய்ததால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

இதனை அங்கிருந்து பொதுமக்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவிட்டு அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் கூறுகையில், ஆபத்தான முறையில் இதுபோன்ற காரியங்களில் எவரும் ஈடுபடக்கூடாது.

 

இச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஆற்றில் குதித்ததோடு அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்து தப்பியுள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற ஆபத்தான காரியங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon