சர்வாதிகாரத்தின் தொடக்கம் இது – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்
மக்கள் பிரதிநிதிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த மசோதா சர்வாதிகாரத்தின் தொடக்கம் எனத் தெரிவித்து, இது ஒரு கருப்பு நாள் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டு 30 நாட்களுக்கு சிறையில் இருந்தாலே, பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் வகையிலான சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இதன்படி, 5 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை விதிக்கும் வகையிலான எந்தவொரு குற்றச்சாட்டின்கீழும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டு, 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால், 31ஆவது நாளில் அவர்களை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய வழிவகை செய்யப்படுகிறது.
இதேபோல, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டால், அவர்களைக் குடியரசுத் தலைவர் பதவிநீக்கம் செய்யவும், அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படாவிட்டால், தானாகவே பதவி நீக்கம் செய்யப்படவும் வழிவகை செய்யப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துவருகின்றன. அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “போட்டியாளர்களை கைது செய்து அவர்களை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரத்தை தன்னிடம் வைத்துக்கொள்வதே சர்வாதிகார வளர்ச்சியின் முதல் படி. இந்த மசோதா அதைத்தான் செய்ய முயல்கிறது” எனத் தெரிவித்து, இது ஒரு கருப்பு நாள் என்றும், இது ஒரு கருப்பு மசோதா என்றும் இது சர்வாதிகாரத்தின் தொடக்கம் என்றும் விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”130வது அரசியலமைப்பு திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல. இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கருப்பு மசோதா. விசாரணை, தண்டனை என எதுவும் இல்லாமல், 30 நாள் சிறையில் இருந்தாலே தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை பதவி நீக்கம் செய்வது என்பது, மக்களின் ஒப்புதல் இல்லாமல் பாஜக இடும் உத்தரவு.
வாக்குகளை திருடுவது, போட்டியாளர்களை மௌனமாக்குவது மற்றும் மாநிலங்களை நொறுக்குதல் என இப்படிதான் சர்வாதிகாரங்கள் தொடங்கும்.





