ரஜினியின் ‘கூலி’ படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ரஜினியின் ‘கூலி’ திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில், படக்குழுவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ‘கூலி’. சன்பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
ஆமீர்கான், சத்யராஜ், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாயிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ‘ஏ’ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. சில மணி நேரங்களிலேயே பெரும்பாலான திரையரங்குகளில் படத்தின் டிக்கெட்டுகள் விற்றுதீர்ந்துவிட்டன. அடுத்த 3 நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல்லாகியுள்ளன.
இதனிடையே நேற்று படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘இந்தப் படம் எல்சியுவில் வராது, ரஜினிக்கான பிரத்யேகமான கதையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தார். மேலும், தியேட்டருக்கு வந்து கூலி படத்தை பார்த்து அனுபவத்தை உணருமாறு கூறியுள்ள லோகேஷ் கனகராஜ் படம் குறித்த ஸ்பாய்லர் தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு ‘கூலி’ படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “தமிழக முதல்வரின் வாழ்த்துகளுக்கும், ‘கூலி’ மீதான உங்களது அன்புக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.






