மதுரை த.வெ.க மாநாடு தேதி மாற்றம்?
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தியில் நடைபெற இருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்ததால் மாநாடு தேதியை மாற்ற தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தீவிரமாக தயாராகிவருகிறார். நிர்வாகிகள் நியமனங்கள் நிறைவடைந்து, பூத் கமிட்டிகள் அமைப்பது, அவர்களுடன் ஆலோசனை நடத்துவது என தவெக தலைமை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. தவெகவின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவண்டி, வி.சாலையில் நடத்திய அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கைகளை அறிவித்தார்.
இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து, தற்போது தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டார். இதற்காக ஆகஸ்ட் 25ஆம் தேதியை முடிவு செய்த, தவெக தலைவர் விஜய், அதற்கான பணிகளை மேற்கொள்ள பொதுச் செயலாளர் என்.ஆனந்திற்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, கடந்த ஜூலை 16ஆம் தேதி மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்தைச் சந்தித்த தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆகஸ்ட் 25ஆம் தேதி மாநாட்டிற்கு அனுமதி கேட்டு மனு அளித்தார்.
இதற்கிடையில், மாநாடு திடல் தேர்வு செய்து அங்கு பந்தக்கால் நடும் பணியும் நடந்தது. தொடர்ந்து மாநாட்டிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில், ஜூலை 29 ஆம் தேதி த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த்தை நேரில் வரவழைத்த மாவட்ட எஸ்.பி அரவிந்த், ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தியில் தொடர்ச்சியாக அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதால், 25ஆம் தேதி மாநாட்டிற்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து தெரிவித்து தேதியை மாற்றும்படி தெரிவித்தார்.
இதனை ஏற்ற தவெக மாநாட்டை வேறு ஒரு தேதியில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இன்று மதுரை மாவட்ட எஸ்.பி.ஐ சந்திக்க தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் வந்தார். தேதியை மாற்றக் கோரி காவல்துறை கொடுத்த பரிந்துரையை ஏற்று ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு பதிலாக மற்றொரு தேதியில் த.வெ.க மாநாடு நடத்த அனுமதி கோரி மனு அளிக்க வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




