கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் பிரதமர் மோடி..!
இங்கிலாந்து, மாலத்தீவு சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தடைந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவில் தரையிறங்கிய முதல் விமானம் என்ற பெருமையுடன், தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திறங்கிய பிரதமரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையடுத்து, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்குள்ள வசதிகளை பார்வையிட்டார். பின்னர், பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன், தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, பிரதமர் மோடிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தேர் மாதிரி சிலையை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, தூத்துக்குடியின் முத்துக்களை தொழிலதிபர் பில்கேட்சுக்கு அண்மையில் பரிசாக அளித்ததாகவும், அதைக் கண்டு பில்கேட்ஸ் வியந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும் தமிழ்நாட்டின் ஆற்றல் மற்றும் வளத்தை முழுமையாக பயன்படுத்த முயற்சிப்பதாகவும், உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு தனிக்கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் பல சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், ரயில்வே கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2014-ஆம் ஆண்டு முதல் உட்கட்டமைப்பில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதாக கூறிய பிரதமர், கடந்த 11 ஆண்டுகளில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டிற்கு வழங்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும் தனது உரையின் போது வ.உ.சிதம்பரனார், பாரதியார் உள்ளிட்டோரின் விடுதலைக்கான பங்களிப்பையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் இரண்டாம் நாள் பயணத் திட்டமாக கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கோயிலுக்கு மதியம் 12 மணிக்கு செல்கிறார். அதன் பின்னர் மாமன்னர் ராஜேந்திர சோழனின் நினைவு உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியிடப்படவுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது.
இரண்டு மணி நேரம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருக்கவுள்ள பிரதமர், மீண்டும் திருச்சி புறப்பட்டு விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளார். பிரதமர் மோடி இன்று கங்கைகொண்ட சோழபுரம் செல்லவுள்ள நிலையில், அவர் இறங்கும் ஹெலிகாப்டர் தளம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்.
பிரதமரின் ஹெலிகாப்டர் இறங்க அமைக்கப்பட்ட ஹெலிபேடில் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, கோயிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொன்னேரியில் புதிதாக ஹெலிபேட் அமைக்கப்பட்டது. இங்கிருந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி கோயிலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





