தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் அதிகரிப்பு..!
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ஒன்றரை லட்சம் முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050 இடங்கள் உட்பட மொத்தம் 11700 மருத்துவ இடங்கள் உள்ளன. 22 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 4 தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள மொத்த இடங்களில் 65 விழுக்காடு இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கும், 35 விழுக்காடு இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், சுயநிதி கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் நடப்பாண்டுக்கான கல்வி கட்டண விவரங்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் இரண்டரை லட்சம் ரூபாய் உயர்த்தப்பட்டு 27 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகவும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான கட்டணம் 30 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கான கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரம், வெளிநாடு வாழ் இந்தியா் பிரிவில் காலியாக உள்ள இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படும் என்றும் அதில், நிா்வாக ஒதுக்கீட்டுக்கான 15 லட்சம் ரூபாய் கட்டணத்திலேயே இந்திய மாணவர்கள் அந்த இடங்களை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்துடன் கூடுதலாக 60 ஆயிரம் ரூபாய் வரை மேம்பாட்டு நிதியாக வசூலிக்கலாம் என்றும் பிற நன்கொடைகள் பெறக் கூடாது என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.





