பள்ளி வாகனம் மீது ரயில் மோதி கோர விபத்து..!
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் பள்ளி வாகனத்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஆளில்லா ரயில்வே கேட்டை பள்ளி வாகனம் கடக்க முயன்ற போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற அதிவிரைவு ரயில் பள்ளி வாகனம் மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் பள்ளி வேன் அப்பளம் போல் நொறுங்கி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனயைில் குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் எழுந்துள்ளது. ரயில் வரும் போது ரயில்வே கேட் திறந்து இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.






