--- --:--:-- --

சீமானுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற வழக்கறிஞர்..!

2

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தைப் பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, போர் முனையில் சந்தித்து பேசியதாகவும், அதன் பிறகு ஏ.கே. 47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பான மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

 

குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தி வருவதால், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தைப் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு மனு அளித்த 15 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் தர வேண்டாமா என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. இதையடுத்து, வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon