ஒரே நேரத்தில் உருவான இரண்டு புயல் சின்னங்கள்..!
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காலை தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மேலும் வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
மேலும் தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அது இன்று வடக்கு திசையை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.மேலும் தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




