மரியாதைக்குக்கூட கேட்டதில்லை.. இது நாகரிகமா.. – கவிஞர் வைரமுத்து ஆதங்கம்
தமிழ்த் திரையுலகில் தனது பல பாடல்களின் பல்லவிகள் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார். படக்குழுவினர் தன்னிடம் அனுமதி பெறுவதில்லை என்றும், மரியாதைக்காகக்கூட ஒரு வார்த்தை கேட்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து தனது பதிவில், “என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு, மரியாதைக்காகக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை. ஒன்றா இரண்டா…” என்று குறிப்பிட்டு, பல படத் தலைப்புகளையும் பட்டியலிட்டுள்ளார்.
தனது படைப்புகள் இவ்வாறு பயன்படுத்தப்படுவது குறித்து தனது மனநிலையை விவரித்த அவர், “செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில், அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன்” என்று பெருந்தன்மையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், “ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது. ஆனால், என்னை ஒரு வார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?” என்று கவிஞர் வைரமுத்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.






