அதிகாலையில் டெல்லி நோக்கி வந்த 2 பாகிஸ்தான் ஏவுகணைகள்..
அதிகாலையில் டெல்லி நோக்கி வந்த 2 பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், 3ஆவது நாளாக நேற்று மாலையிலேயே பாகிஸ்தான் டிரோன் மூலம் இந்தியாவின் எல்லையோர மாவட்டங்களில் தாக்குதலை ஆரம்பித்தது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநில எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தான் டிரோன்கள் பறந்த பகுதிகளின் மீது உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் எல்லைப் பகுதிகள் முழுவதும் இருளில் மூழ்கியது. இருள் சூழ்ந்த வானில் ஒளிப்புள்ளியாகத் தெரிந்த பாகிஸ்தான் டிரோன்களை இந்திய ராணுவம் உடனுக்குடன் முறியடித்தது.
இதனைத்தொடர்ந்து காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் அவந்திபோரா விமான தளத்தின் மீதும் பாகிஸ்தான் டிரோன்களை வீசித் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது. எனினும் அவற்றை இந்திய ராணுவம் வான் பரப்பிலேயே அழித்தது.
காஷ்மீரின் வடக்கில் பாரமுல்லா தொடங்கி தெற்கே பூஞ்ச் வரை 26 இடங்களில் டிரோன்கள் காணப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. ஜம்மு நகர், சம்பா, உதம்பூர், பூஞ்ச் பகுதிகளில் டிரோன்கள் பறந்த வண்ணம் இருந்தன.இந்நிலையில், இன்று அதிகாலையில் டெல்லி நோக்கி ஃபத்தே 2 ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியது. இதனை ஹரியானாவின் சிர்சாவில் வழிமறித்து இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்துள்ளது.





