பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்த பிரதமர் மோடி..!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அனைத்து படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பஹல்காமில், கடந்த 22ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத தருணத்தில், தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நிகழ்த்தியதில், அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க பிரதமரும், உயர் அதிகாரிகளும் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.அந்த வரிசையில் நேற்று, மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
இதில், எல்லை பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றின் தலைமை இயக்குநர்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.இதன் பின்னர், பிரதமர் மோடி தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌஹான் மற்றும் முப்படைகளின் தளபதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, உள்துறை செயலாளர் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, பயங்கரवादத்திற்கு எதிராக கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த நாட்டின் நிலைப்பாடு என்று பிரதமர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய ராணுவத்தின் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. எப்படி, எந்த நேரத்தில் பதிலடி கொடுப்பது என்றும், இலக்கு என்ன என்பதையும் படைகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என பிரதமர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




