--- --:--:-- --

தமிழ்நாடு டெல்லிக்கு எப்போதும் Out of Control தான் – முதலமைச்சர்

2

திருவள்ளூரில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்த பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட பெருஞ்சேரி கிராமத்தில், மாவட்ட வருவாய்த் துறை சார்பில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, ஆவடி மற்றும் பூந்தமல்லி தொகுதிகளில் வசிக்கும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

 

இந்த விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”திருவள்ளூர் மற்றும் சென்னையை சுற்றி ஏராளமான தொழில் வளாகங்களை உருவாக்கியவர் கலைஞர்.

 

அ.தி.மு.க.வின் இருண்ட ஆட்சிக் காலத்தில் பத்தாண்டுகள் முடங்கிக் கிடந்த உட்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக சுறுசுறுப்பாக நடைபெறுகிறது. திராவிட மாடல் அரசின் அக்கறையான நிர்வாகத்தால் அனைத்துத் துறையும் வளர்கிறது – அனைத்து தரப்பு மக்களும் வளர்கின்றனர். அனைத்து துறைகளும், அனைத்து தரப்பு மக்களும் வளருவதால் தமிழ்நாடு அனைத்து வகையிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

 

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் தமிழ்நாட்டில் மாபெரும் சமூகப் புரட்சி நடைபெற்று வருகிறது. மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் அளித்து, தன்னம்பிக்கையை உயர்த்தியிருக்கிறது.டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றும் அடிபணியாது.

 

மத்திய அமைச்சர் அமித்ஷா அவருக்கு சவாலாக சொல்கிறேன். டெல்லி ஆளுமைக்கு அடி பணியாது, தனித்துவம் கொண்டவர்கள் நாங்கள். நீங்கள் ஏமாற்ற வேண்டாம். எங்கள் தமிழ்நாடு டெல்லிக்கு எப்போதும் அவுட் ஆப் கன்ட்ரோல் தான். நாங்கள் உருட்டல் மிரட்டலுக்கு அடிபணிபவர்கள் இல்லை. எந்த ஷா வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது” இவ்வாறு அவர் பேசினார்.

Right Menu Icon