--- --:--:-- --

சென்னை வரும் அமித்ஷா..!

1

த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை இரவு தமிழ்நாட்டிற்கு வர இருக்கிறார். இரு நாள் பயணமாக திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பயணத்தில் அவர் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் வேலைகளை தற்போதே துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமைக் கட்சியாக உள்ள பாஜக தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஆலோசிக்க அக்கட்சியின் மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரவிருக்கிறார்.

 

நாளை இரவு 10.30 மணிக்கு சென்னை வரும் அமித்ஷா மறுநாள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு அரசியல் கட்சியின் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் முக்கிய நிர்வாகிகளைச் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

 

பாஜக நிர்வாகிகளின் சந்திப்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்வு குறித்து அவர் ஆலோசிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். சந்திப்புகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு பாஜக மேற்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகியுள்ளது.

 

கூட்டணி தலைவர்களைச் சந்திக்கும் அமித்ஷா வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது, கட்சிகளுக்கான தொகுதிகள் பங்கீடு உள்ளிட்டவற்றையும் அவர் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ்நாடு பயணத்தைத் தொடர்ந்து அமித்ஷா, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கும் மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பயணித்து அங்கேயும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சந்தித்து ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தற்போது மேற்கொள்ளப்படும் பயணத்தில், கட்சிகளுக்கான முதற்கட்ட தொகுதி பங்கீடு, தேர்தலை எதிர்கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை குறித்து அவர் பேச இருக்கிறார் என தகவல்கள் சொல்லப்படுகின்றன. இந்தப் பயணத்தின் போது அமித்ஷாவை அதிமுகவின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Right Menu Icon