--- --:--:-- --

மக்களவையில் நிறைவேறியது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா..!

1

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா 12 மணி நேர காரசார விவாதத்திற்குப் பிறகு மக்களவையில் நள்ளிரவில் நிறைவேறியது. நாடு முழுவதும் உள்ள வக்ஃபு வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பான வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

 

மசோதாவை தாக்கல் செய்து பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, எந்த நிலத்தையும் வக்ஃபு வாரிய சொத்தாக அறிவிக்க வகை செய்யும் கொடூரமான சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மசோதாவை எதிர்ப்பவர்களை வரலாறு மன்னிக்காது என்றும் தெரிவித்தார்.மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, வக்ஃபு சட்டத் திருத்த மசோதா மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக இருப்பதாகக் கூறினார்.

 

எந்தப் பரிந்துரையின் அடிப்படையில் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாட்டில் ஒரு கிராமம் முழுக்க வக்ஃபு சொத்தாக அறிவிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியது உண்மைக்குப் புறம்பானது என்றும் தெரிவித்தார்.மேலும் இந்து – இஸ்லாமியர் இடையே வெறுப்பு அரசியலை பரப்புவதற்காக வக்ஃபு வாரிய மசோதா கொண்டு வரப்பட்டிருப்பதாக எம்.பி. தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டினார்.

 

நன்கொடையாளர்களை மதத்தின் அடிப்படையில் பிரிப்பது நல்லதல்ல என்று கூறிய மதிமுக எம்.பி. துரை வைகோ, வக்ஃபு சொத்துகளை இஸ்லாமியர்கள் மட்டுமே பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் வக்ஃபு சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்பை நீர்த்துப்போகச் செய்துவிடும் என்று காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் விமர்சித்தார். அரசு இன்று ஒரு சமூகத்தின் சொத்துகளை குறி வைத்துள்ளதாகவும், நாளை அது பிறரையும் குறிவைக்கலாம் என்றும் கோகாய் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

 

இதேபோன்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் மசோதாவிற்கு எதிராகப் பேசினர். கோயில்கள் மற்றும் மசூதிகளின் பெயரால் நாட்டில் பிரிவினையை உருவாக்க மத்திய அரசு முயற்சிப்பதாகச் சாடிய எம்.பி. ஓவைசி, வக்ஃபு வாரிய மசோதா நகலை கிழித்தெறிந்து எதிர்ப்பை பதிவு செய்தார்.

 

தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வக்ஃபு வாரிய நிர்வாகத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்று கூறினார். வக்ஃபு வாரிய நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடாது என்றும் வக்ஃபு வாரியங்களை மேற்பார்வையிடும் நிர்வாகப் பணியை மட்டும் அதிகாரிகள் செய்வார்கள் என்றும் உறுதியளித்தார். மேலும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா உள்ளிட்ட பாஜக கூட்டணிக் கட்சிகள் மசோதாவிற்கு ஆதரவளித்தன.

 

12 மணி நேரம் காரசாரமாக விவாதம் நடைபெற்ற நிலையில், நள்ளிரவு 12 மணியளவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த அனைத்து திருத்தங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன.

 

மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இந்த சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்நிலையில், வக்ஃபு மசோதா என்பது இஸ்லாமியர்களின் தனிப்பட்ட சட்டங்களையும், சொத்துரிமைகளையும் அபகரிப்பதையே நோக்கமாகக் கொண்ட ஒரு ஆயுதம் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon